அமராவதி கரையில் பழமையான அம்மன் சிலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டுபிடிப்பு
பதிவு செய்த நாள்
24
ஆக 2025 01:08
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் அமராவதி கரைபகுதியில் ஆய்வு செய்து வருகிறது. இந்த கள ஆய்வில், வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிர்வாகிகள், கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார், அருள்செல்வன், ருத்ரபாளையம் ராஜராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய தொல்லியல் துறை (ஓய்வு) தொல்லியல் அறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது: அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கணியூர். கடத்துார் என அனைத்து ஊர்களிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன. குமணன் துறை பகுதியில், ருத்ரபாளையத்திற்கும், கல்லாபுரத்திற்கும் இடையில், சிவாலயம் இருந்ததற்கான சான்றாக, பெரிய கற்சிலை இருப்பதன் வாயிலாக உறுதியாகிறது. இது கொங்கு சோழர் கால சிற்பமாக உள்ளதால், பார்வதியின் சிலையாக இருக்கலாம். அற்புதமான வேலைப்பாடுகளுடன் காணப்படும் இந்த சிலை, 5 அடிக்கு, 5 அடி வட்ட வடிவமாக உள்ள ஆவுடை எனும் லிங்கத்தின் அடிப்பகுதியும், அதற்கு மேல், நான்கு அடி உயரம் உள்ளது. பரந்த மணி மகுடம், எட்டு கரங்களும், அணிகலன்களும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இடுப்பின் கச்சையும், இரு கால்களிலும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. காலின் பாதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. வட்ட வடிவ ஆவுடையின் மத்தியில் சிலையை வைத்துள்ளனர். இதில், எண்கோண வடிவதுளை உள்ளதால், எண் பட்டை வடிவத்தில் பெரிய அளவிலான லிங்கம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. நாளடையில் கோவில், சிவலிங்கம் மண்ணில் மறைந்திருக்கலாம். தற்போது சிலை கிடைத்துள்ள இடத்திற்கு அருகில், குமணன் துறை இருப்பதும், அங்கும் இது போன்ற சிதைந்த கற்சிற்பங்கள் ஏராளமாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், கொங்குச்சோழர்கள், விக்ரம சோழன், ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் உள்ளதால், இங்கு கிடைக்கும் சிலைகள், கி.பி 10ம் நுாற்றாண்டு முதல் 12ம் நுாற்றாண்டு காலத்துக்குள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு, கூறினார்.
|