திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த கஜமுக சூரசம்ஹாரத்தில் மழையிலும் பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இக் கோயிலில் சதுர்த்தி பெருவிழா ஆக.18 ல் துவங்கியது. 6ம் நாளான நேற்று கஜமுகசூரசம்ஹாரத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவர் சன்னதியில் தந்தம் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் தந்தத்துடனும், ரிஷப வாகனத்தில சண்டிகேஸ்வரருடன் எழுந்தருளினார். தொடர்ந்து விநாயகர் புறப்பாடு துவங்க, கோயிலுக்கு வெளியே சூரன் பல வித உருவங்களில் விநாயகரை போருக்கு அழைத்தார். கோயிலை வலம் வந்த விநாயகர், திருக்குளத்தின் வடகரையில் சூரனை எதிர் கொண்டார்.
பல வித உருவங்களை மாற்றி தப்பிக்க முயன்ற சூரன் கஜமுகமாக மாறிய போது, தனது வலது தந்தத்தால் சூரனை வதம் செய்ததை சிவாச்சார்யார் நிகழ்த்தினார். இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதி வலம் வந்தார். இன்று காலை 9:30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 8:30 மணிக்கு வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும். ஆக.26 மாலை தேரோட்டம் நடை பெறும். பெரிய தேரில் விநாயகரும், புதிய தேரில் முதன்முறையாக சண்டிகேஸ்வரரும் எழுந்தருள்வர்.
அன்று ஆண்டுக்கு ஒரு முறையாக சந்தனக்காப்பில் மூலவர் அருள்பாலிப்பார். ஆக.27ல் விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் குளத்தில் சதுர்த்தித் தீர்த்தவாரியும், மதியம் மூலவருக்கு முக்குருணி மோதகம் படையலும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும்.