மாணவர்கள் சமூகத்திற்கு சேவையும், தொண்டும் செய்ய வேண்டும்:ஸ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2025 02:08
தஞ்சாவூர்; அகில உலக ராமகிருஷ்ண மடங்களின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ், பல்வேறு நிகழச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தார். தொடர்ந்து கும்பகோணத்திற்கு1897-ம் ஆண்டு சாமி விவேகானந்தர் வந்து பேசிய இடமான டவுன் போா்ட்டர் ஹாலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் நடந்த விவேகானந்தர் சிலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமிவிவேகானந்தர் சிலை வழங்கினார்.
பிறகு அவர் கூறியதாவது: கும்பகோணம் நகர பள்ளியில் சுவாமி விவேகானந்தர் 165 ஆண்டுக்கு முன்பு உரையாற்றி சென்றுள்ளார். இப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பாக்கியசாலிகள். உலகளாவிய கணித மேதை ராமானுஜம் இங்கு தான் படித்தார். சுவாமி விவேகானந்தர், கணிதமேதை ராமானுஜர் ஆகியோர் அருள் உண்டு. இவர்களின் அருளைப் பெற்ற அனைவரும் எந்த துறைக்கு சென்றாலும், சிறந்தவர்களாக விளங்க வேண்டும். அரசியல் வழிதடத்தில் சென்றால் அங்கேயும் உயராக வேண்டும். முன்னேறிச் செல்ல முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
நமது வாழ்வில் உலகிய வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என இரண்டு உண்டு. இந்த இரண்டிலும் நாம் முன்னேறி செல்ல வேண்டும். உலகிய வாழ்க்கையான அறிவியல், தொழில்நுட்பம், கல்வியில் எப்படி முன்னேறுவது என எல்லோருக்கும் தெரியும். அதையும் தாண்டி ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறுவது தான் உபதேசம். இறைவன் எல்லோரிடம் உள்ளார். இறைவனை நினைத்து, அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும். மனிதனுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் சேவை,வழிபாடாகும். கோவிலில் வழிபாடு செய்தால் பக்தியும், சக்தி வரும். இந்த பக்தியையும் சக்தியையும் மனிதனுக்கு சேவை செய்ய பயன்படுத்த வேண்டும். அதுவும் தான் உண்மையான ஆன்மீக முன்னேற்றம். மாணவர்கள் படிப்பு மூலம் முன்னேறினாலும், சமூகத்திற்கு சேவையும், தொண்டும் செய்ய வேண்டும். மாணவர்கள் உண்மையை சொல்ல வேண்டும். உலகில் இருப்பவர்கள் எல்லாரும் நமது உறவினர்கள் என நினைக்க வேண்டும். உலகில் இருக்கும் அனைவரும் இறைவனின் குழந்தைகள். இதனை மனதில் பதிய வைத்துக் கொண்டால் புனிதம் பெறலாம். பொய் சொல்பவர்கள் தான் பயப்படுவார்கள் உண்மையை பேசுபவர்கள் எப்பொழுதும் தைரியமாகத்தான் இருப்பார்கள். இதனை, மாணவ மாணவிகள் மறக்கக்கூடாது என்றார். இந்த நிகழ்ச்சிகளில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தஜி மகராஜ், நீதிபதி சத்தியமூர்த்தி, எம்.எல்.ஏ. அன்பழகன், மேயர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.