பிரளயம் காத்த விநாயகருக்கு இன்று அதிகாலை வரை விடிய விடிய தேன் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2025 10:08
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி கோவிலில் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானதாகும். வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேனபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் எதுவும் கிடையாது. விநாயகர் சதுர்த்தியன்று இரவு தொடங்கும் தேனபிஷேகம் விடிய விடிய நடைபெறும். அபிஷேகம் செய்யப்படும் தேன், விநாயகரின் திருமேனியால் உறிஞ்சப்படுவதும், அபிஷேகம் நிறைவடையும் வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் சிறப்பான ஒன்று. பல்வேறு சிறப்புகள் பெற்ற பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாலை தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வழங்கிய தேனால் விநாயகருக்கு விடிய விடிய அபிஷேகம் செய்யப்பட்டு இன்று அதிகாலை நிறைவடைந்தது.