சஞ்சீவிராயர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2025 11:09
காஞ்சிபுரம்: அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராமத்தில், சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோவில் கோபுரம், மதில் சுவர் பிற பகுதிகள் சேதமடைந்த நிலையில் இருந்தன. எனவே, இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் 2023 –- 24ல் சட்டசபை அறிவிப்பின்படி, 2.35 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிக்கான பூமி பூஜை, கடந்த 21ம் தேதி நடந்தது. பூமி பூஜை போடப்பட்டு 10 நாட்களாகியும், கோவில் திருப்பணி துவக்கப்படாமல் உள்ளது.
எனவே, சஞ்சீவிராயர் கோவிலில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.