பக்தர்களுக்கு ஆரோக்கியம் அருளும் பீரேஸ்வரர்
பதிவு செய்த நாள்
02
செப் 2025 01:09
கர்நாடகாவில் ஒவ்வொரு கோவிலும் தனி சிறப்புகள், முக்கியத்துவம் வாய்ந்தவை. சிக்காடி கிராமத்தில் குடிகொண்டுள்ள பீரேஸ்வரர், பக்தர்கள் வேண்டிய வரங்களை அள்ளித் தருகிறார். சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின் சிக்காடி கிராமத்தில் பீரேஸ்வரர் கோவில் உள்ளது. சிவனின் அம்சமான பீரேஸ்வரர் மூன்று தலைமுறைகளாக, இங்கு குடிகொண்டுள்ளார். கிராமத்தின் இதய பகுதியில் அமைந்துள்ள இக்கோவில், சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். சிவராத்திரி ஆண்டுதோறும் இங்கு சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அன்றைய தினம் இரவு பக்தர்கள் உறங்காமல் விழித்திருப்பர். விடிய விடிய சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், பஜனை நடக்கும். இங்கு குடிகொண்டுள்ள பீரேஸ்வரர், பக்தர்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறார். உடலில் ஏதாவது நோய்கள் இருந்தால், இங்கு வந்து வேண்டினால் உடனடியாக சரியாகும் என்பது ஐதீகம். யாராவது நோயால் அவதிப்பட்டால், அவரது குடும்பத்தினர் தண்ணீர் மற்றும் பூக்களை காணிக்கையாக கொண்டு வந்து, சுவாமி முன்னால் வைத்து, பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நீரை பீரேஸ்வரருக்கு அர்ச்சகர் அபிஷேகம் செய்வார். பூக்களை சுவாமிக்கு அணிவிப்பார். அதன்பின் அபிஷேக நீரையும், பூக்களையும் பக்தர்களுக்கு கொடுப்பார். நோயாளியிடம் பூவை கொடுத்து, அபிஷேக நீரை அவர் மீது தெளித்தால் எப்படிப்பட்ட நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோன்று செய்த பலருக்கு, நோய் குணமான உதாரணங்கள் உள்ளன. திருவிழா இதனால், கோவில் பிரசித்தி பெற்றுள்ளது. சுற்றுப்புற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சிவனை வேண்டி அருள் பெறுகின்றனர். நோயில் இருந்து மீண்ட பலர், பீரேஸ்வரர் கோவில் விழாவில் பங்கேற்கின்றனர். ஆண்டுதோறும் திருவிழா ஊர்வலத்தில் நந்தியுடன், இரண்டு சிவன் விக்ரஹங்களை கொண்டு செல்கின்றனர். இன்றைக்கும் கிராமத்தில் யாருக்காவது, உடல்நிலை பாதிக்கப்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்து செல்வற்கு முன், சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்த நீரை, நோயாளி மீது தெளிக்கின்றனர்; அவரும் குணமடைகிறார். இதுவே கோவிலின் தனிச்சிறப்பு.
|