உடுப்பியில் 365 விநாயகர் கோவில்கள்
பதிவு செய்த நாள்
02
செப் 2025 01:09
உடுப்பி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கோவில்கள் தான். இத்தகைய ஊரில் இருப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இங்குள்ள உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இத்தகைய நகரில், 1,000 ஆண்டுகளுக்கு முன், தற்போது உடுப்பியில் இருந்து குந்தாபூர் செல்லும் வழியில், 13 கி.மீ., தொலைவில் பிரம்மாவர் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது பர்கூர். துளு நாட்டின் தலைநகராக விளங்கியது. 9 – 12ம் நுாற்றாண்டு இங்கு வசிப்பவர்களின் கூற்றுப்படி, முதன் முதல் கடவுளான விநாயகருக்கு 365 கோவில்கள் இருந்தது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், ஒன்பது முதல் 12ம் நுாற்றாண்டு காலகட்டத்தில் 365 கோவில்கள் இருந்தன. அந்தந்த கோவில்களுக்கு தெப்பக்குளமும் இருந்துள்ளன. பர்கூர் ராஜா, தினமும் ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை ஒரு கோவிலில் அவர் தரிசனம் செய்தால், மீண்டும் அக்கோவிலுக்கு செல்ல ஓராண்டு ஆகுமாம். இதில் தற்போது பர்கூர் பட்டே விநாயகர் கோவில், சவுலிகேரி கோவில், ரத்னகர்பா கோவில் என மூன்று கோவில்கள் மட்டுமே உள்ளன. வடக்கு நோக்கி... மஹாராஜா காலத்துக்கு முன்பிருந்தே இக்கோவில் இருந்ததாகவும், இடுப்பில் ஆடையுடன் தோன்றியதால், இவரை, பட்டே’ விநாயகர் என்றும் அழைக்கின்றனர். அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் ஒரே விநாயகர் இவர் மட்டுமே. மேலும், சிறிது கிழக்கு திசையில் சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தி, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். புதிதாக வாகனங்கள் வாங்குவோர், இங்கு பட்டே விநாயகரை தரிசித்து பூஜை செய்தால், தங்களுக்கும், வாகனங்களுக்கும் எதுவும் ஆகாது என்று நம்புகின்றனர். விசேஷ நாட்களில் கோவில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உத்சவம் நடக்கும்.
|