தஞ்சாவூர், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் கோகுலாஷ்டமி பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் நடைபெற ஏதுவாக பாண்டுரங்கனுக்கு முதன்முறையாக மரத்தாலான தேர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க இபோனி வகை மரக்கட்டைகளைக் கொண்டு ரத சாஸ்த்திரத்தின்படி 18 அடி அகலம் 18 அடி உயரத்தில் சுமார் 6 .5அடி உயரம் கொண்ட நான்கு சக்கரங்களுடன் 40 டன் எடையில் சைவ வைணவ இறை வடிவங்கள், மகான்கள் என 250 சிற்பங்களுடன் தேர் திருப்பணி முழுமை பெற்றது.
புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று 4ம் தேதி கோயில் வளாகத்தில் நடந்தது. கோயில் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் சிறப்பு ஆராதனைகள் செய்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். சுமார் 4மணி நேரம் கோயில் ல் வளாகம் மற்றும் கோசாலை வீரசோழன் ஆற்று பாலம் வரை வெள்ளோட்டம் செண்டை மேளங்கள் முழங்க சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. பக்தர்கள் விட்டலா விட்டலா, ராமா ராமா, கிருஷ்ணா கிருஷ்ணா என்ற கோஷத்துடன் புதிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கோயிலில் வரும் 14ம் தேதி கோகுலாஷ்டமி உற்சவம் நடக்கிறது. நாளை 6ம் தேதி முதல் கோகுலாஷ்டமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7ம் தேதி வனபோஜனம், எட்டாம் தேதி காளிய நர்த்தனம், 9ம் தேதி யானை வாகனம், 10ம் தேதி அனுமந்த வாகனம், கமல வாகனம், 11ம் தேதி கருட வாகனம், ஹம்ச வாகனம், 12ம் தேதி மாலை குதிரை வாகனம் புறப்பாடும், 13 ம் தேதி காலை வெண்ணைத்தாழி உற்சவம், மாலை திருக்கல்யாண வைபவமும், 14ம் தேதி காலை 8:மணிக்கு தேரோட்டமும், 11:30 மணிக்கு காவிரியில் தீர்த்த வாரியும் நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு கிருஷ்ணர் ஜனனம் உற்சவம் நடக்கிறது.