நாகை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா விமர்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2025 10:09
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேளதாளம் முழங்க, அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தி வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமிக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலின் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக துவங்கியது. 14, நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தியவாறு அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில்வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது மேளதாளம் முழங்க, வானவேடிக்கை என பூச்சொரிதல் விழா களைகட்டியது. பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர். அக்கரைப்பேட்டை முத்து மாரியம்மன் ஆலயத்தின் முக்கிய திருவிழாவான செடில் உற்சவம் வரும் 14 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் விதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி சுற்ற உள்ளனர்.