வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி விழா 22ல் துவக்கம்; அருளோடு ஆனந்தமும் கிடைக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2025 04:09
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் இந்த வருடம் ‛சக்தி கொலு பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட உள்ளது.
கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவதுதான் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சம். நவராத்திரி விழா என்றதுமே நம் ஞாபகத்துக்கு வருவது கொலு பொம்மைகள்தான். வீடுகள், கோயில்களில் வைக்கப்படும் அழகழகான அர்த்தங்கள் நிறைந்த கொலு பொம்மைகளை பார்த்து ரசிப்பதில் இருக்கும் ஆன்மீக ஆனந்தமே தனிதான். சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சக்தி கொலு நிகழ்வு செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 2ம் தேதி வரை பிரமாண்டமான முறையில் நடக்கிறது. பக்தர்கள் வேண்டுதலுடன் வழங்கும் பொம்மைகளை கொண்டு கொலு அமைக்கப்படுவது வடபழனி ஆண்டவர் கோயில் சக்தி கொலுவின் தனிச்சிறப்பு. கடந்த ஆண்டைப்போலவே பிரசித்தி பெற்ற கோயில்களின் மூலவர் சிலைகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்படவுள்ளன. அயோத்தி ராமரின் மூலவர் சிற்பமும் சக்தி கொலுவை அலங்கரிக்கவிருக்கிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு சன்னிதியில் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கும். பிரபலங்கள் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகளுடன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. வடபழனி ஆண்டவர் கோயிலில் சக்தி கொலுவை பக்தர்கள் கண்டு களித்து வடபழனி ஆண்டவரின் அருளாசியை பெற்றுச் செல்ல சிறப்பான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.