மங்கலம் மலைக்கோவில் திடீரென மாயம் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2025 04:09
பல்லடம்; பல்லடம் அருகே, மங்கல்ம் மலைக்கோவிலில், திடீரென கோவில் மாயமானது, சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பல்லடத்தை அடுத்த, மங்கலம் அரசுப் பள்ளி அருகே, சிறிய மலை குன்றின் மேல், மாதேசிலிங்கம் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலைமீது ஏறி சிவனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திடீரென, மலை மீது இருந்த கோவில் மாயமானது. தகவல் அறிந்த பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் அண்ணாதுரை தலைமையிலான சமூக ஆர்வலர்கள், மங்கலம் மலைக்கோவில் சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து அண்ணாதுரை கூறுகையில், மங்கலம் மலைக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது என்பது கோவிலை பார்த்தாலே உணர முடியும். மலை மீது சிவபெருமான் அருள்பாலிப்பது எங்கும் இல்லாத சிறப்பு. இப்படிப்பட்ட கோவிலை முறையாக பராமரிக்காமல் அறநிலைய துறை பாழ்படுத்தி வருகிறது. கோவில் முன் மண்டபம் கரையான் அரித்து சேதமடைந்துள்ளது. பராமரிப்பு இல்லாத கோவிலுக்கு பக்தர்கள் எவ்வாறு வருவார்கள். ஆன்மிகத்தை வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை இவ்வாறு அவல நிலையில் கோவிலை வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள இக்கோவிலில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென மாயமாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கோவில் பூசாரியை கேட்டால், பானரமைப்பதற்காக, சமீபத்தில்தான் இடித்து அகற்றப்பட்டதாக கூறுகிறார். எனில், கோவிலில் பாலாலயம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான அடையாளமே கோவிலில் இல்லை. எனில், கோவிலை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அறநிலையத்துறை செயல்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கோவிலை விரைவாக கட்டி, புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பினை கோவில் முன்பாக வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.