பதிவு செய்த நாள்
29
ஜன
2026
01:01
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு பூஜை நடக்கிறது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவிலில் மாமாங்க திருவிழா எனும் மஹாமக கும்பமேளா, தற்போது வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 270 ஆண்டுகளுக்குப் பின், தற்போது விழா நடப்பதால், பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
பாரதப்புழா நதியில், பிப்., 3 வரை காலை 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பக்தர்கள் புனித நீராடலாம். மாலையில் நிளா ஆரத்தி நடக்கிறது.
நேற்று தேவதையின் அருளை பெறுவதற்காக புனிதமான அட்சரங்களை பாதச்சுவடுகளாக களரி தரையில் வரைந்து, தேவதையை ஆவாஹனம் செய்யும் சடங்கான களரி அட்சரங்கால் பூஜை நடந்தது.
ஜெய ஏகாதசி மற்றும் ரோகிணி நட்சத்திரம் கூடிவரும் நன்னாளான இன்று முத்தன் மற்றும் முத்திக்கு (முன்னோர்கள், குலதெய்வ வழிபாடு) பூஜை நடக்கிறது.
கும்பமேளா அமைப்பினர் கூறுகையில், ‘விவசாய செழிப்பு மற்றும் நன்மக்கட்பேறு வேண்டி, கேரளாவின் தனித்துவமான திராவிட முறைப்படி இந்த பூஜை நடத்தப்படுகிறது. ஆச்சாரியர் பறய்க்கல் பிரதீப் பணிக்கர் தலைமையில் இந்தப் பூஜை நடக்கிறது.
ஜெய ஏகாதசி விரதம் புண்ணியத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல், பாவங்களைப் போக்கவல்லது என்பது சாஸ்திர நம்பிக்கையாகும்,’ என்றனர்.