திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2012 11:12
திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. தென்னிந்தியாவின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஆதிகேசவ பெருமாள் கோயில் குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவட்டாரில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றி பரளியாறு ஓடுவதால் இப்பகுதி திருவட்டாறு என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலை சிறப்பித்துள்ளனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புவிழா சிறப்பாக நடக்கிறது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று(24ம் தேதி) நடந்தது. விழாவில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அகண்டநாம ஜெபம், முழுக்காப்பு, மதியம் அன்னதானம், மாலை மலர் முழுக்கு, அலங்கார தீபாராதனை, இரவு சொர்க்கவாசல் வழியாக பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளல், சமயமாநாடு உட்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகளவு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.