பதிவு செய்த நாள்
21
செப்
2025
01:09
காஞ்சிபுரம்: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூத்த குடிமக்களை, வைணவ கோவில்களுக்கு இலவசமாக அழைத்து செல்லும் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா பேருந்தை காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், முக்கிய வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், 60 – 70 வயதிற்கு உட்பட்ட 1,000 மூத்த குடிமக்களை இலவசமாக உணவு உட்பட ஆன்மிக பயணத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டம், கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் வைணவ கோவில்களுக்கான ஒருநாள் ஆன்மிக பயணம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் துவங்கியது.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூத்த குடிமக்கள் 50 பேருக்கு குடிநீர், உணவு, சுவாமி படம், கோவில் பிரசாதங்கள் அடங்கிய மஞ்சள்பை தொகுப்பை காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி வழங்கினார். ஆன்மிக சுற்றுலா பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பாண்டவ துாதப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் என, ஐந்து வைணவ கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் ஜெயா, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர் ராஜலட்சுமி, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர்.