ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோவில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையில் திருப்பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 11ல் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தில் உள்ள பச்சைவண்ணர், பவள வண்ணர், அழகிய சிங்கபெருமாள் கோவில்களை பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணியை துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் பவளவண்ணர் கோவில் மதில் சுவர் சீரமைப்பு பணி துவங்கியது. கோவில் கோபுரங்கள் சீரமைப்பு பணிக்காக சவுக்கு கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த கட்ட பணி துவக்கப்படாமல் ஒரு மாதமாக கோவில் கோபுரங்கள் சீரமைப்பு திருப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, பவளவண்ணர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காஞ்சிபுரம் பவளவண்ணர் கோவிலில் திருப்பணி துவக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. இருப்பினும் திருப்பணி நடைபெறுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்’ என்றார்.