திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், நேற்று துவங்கிய நவராத்திரி விழா, வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. வரும் 30ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுவதால், தினமும் கஜலட்சுமி அம்மையார், அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவை, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதேபோல், திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் மட்டும், ஒன்பது நாட்களுக்கு பதிலாக, 15 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய நவராத்திரி விழா, வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. தினமும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கும். மேலும், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளுக்கு, தினமும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.