கொளஞ்சியப்பர் கோவிலுக்கு புதிய கோபுரங்களுக்கு கருங்கல் பதிப்பு சிறப்பு பூஜையுடன் துவக்கம்
பதிவு செய்த நாள்
24
செப் 2025 05:09
விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் புதிதாக கட்டப்பட உள்ள ராஜ கோபுரங்களுக்கு கருங்கல் பதிக்கும் பணி சிறப்பு பூஜையுடன் துவங்கியது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமியிடம் வேண்டி பிராது கட்டினால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும்; சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இருப்பினும், வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை செய்து தரவில்லை. குளியலறை, கழிவறை, முடி காணிக்கை செலுத்துமிடம், திருமண மண்டபம் போன்ற வசதிகள் குறைவு காரணமாக தனியாரில் வாடகை செலுத்தும் அவலம் தொடர்ந்து. இதனைச் சுட்டிக்காட்டி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, திருமண மண்டபத்தை சீரமைத்திட, அறநிலையத்துறை சார்பில் 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி சீரமைப்பு பணிகள் துவங்கியது. மேலும், ‘தினமலர்’ வெப்சைட்டில் வெளியான செய்தி மூலம் பழுதான கழிவறை, குளியலறையை நடிகை நளினியின் சகோதரர் கார்த்திகேயன், 26 லட்சம் ரூபாயில் புதுப்பித்து தர நிதி வழங்கினார். தொடர்ந்து, 2026ல் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டு, அமைச்சர் கணேசன் முன்னிலையில் திருப்பணிகள் துவங்கியது. அதில், புதிதாக தெற்கு, மேற்கு ராஜ கோபுரங்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டு, இன்று காலை கருங்கல் பதிக்கும் பணி நடந்தது. சிவாச்சாரியார்கள் மணிகண்டன், ராஜேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் சிறப்பு வேள்வி பூஜைகள் நடத்தினர். திருப்பணி கமிட்டி தலைவர் அகர்சந்த் முன்னிலையில் அமைச்சர் நேருவின் மனைவி சாந்தா, மருமகள் தீபிகா அருண் துவக்கி வைத்தனர். செயல் அலுவலர் பழனியம்மாள், கமிட்டி நிர்வாகிகள் பாலச்சந்தர், விஸ்வநாதன், பழமலை, முருகதாஸ், ராதாகிருஷ்ணன், அருள்குமார், சிங்காரவேல், ரத்தினராஜன், ராம்குமார் உட்பட பக்தர்கள் உடனிருந்தனர்.
|