திருப்பரங்குன்றம்; சிவகங்கை சாமியார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வராகி கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருப்பரங்குன்றத்தில் 10 அடி உயரத்தில் வராஹி கற்சிலை தயாராகிறது. அச்சிலை தயாரிக்கும் திருப்பரங்குன்றம் ஸ்ரீசாஸ்தா சிற்பக்கலைகூடம் உரிமையாளர் அய்யனார் கூறியதாவது: மூன்று முகங்கள், 18 கரங்கள், கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, பிரம்பு, மான், அம்பு, வில், திரிசூலம், வாங்குஅரிவால், கதை, கோடாரி, மணி, மனித தலை, கேடயம் ஆகியவற்றுடன் பிராதன வலது கரம் அபயம் நிலையிலும், இடது கரம் வரதம் நிலையிலும் நின்ற கோலத்தில் பின்புறம் குதிரை வாகனத்துடன் இரண்டு அடி உயர பத்ம பீடத்தில் பத்தடி உயரத்தில் ஒரே கல்லில் வராஹி கற்சிலை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பரம்பரை பரம்பரையாக கருங்கற்களால் சுவாமி சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் சுவாமி சிலைகள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். தற்சமயம் சிலைகள் தயாரிக்க கருங்கற்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே வைத்திருந்த கற்கள் மூலம் சிலைகள் தயாரித்து வருகிறோம். இந்த சிலைகள் தயாரிப்பதற்கு வேலையாட்களும் பற்றாக்குறையாக இருப்பதால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்றார்.