புரட்டாசி மூன்றாம் சனி; ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2025 01:10
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
புரட்டாசி மாதம் நம்பெருமாளுக்கு உகந்த மாதமாகும், இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் எள், மற்றும் நெய்விளக்கிட்டும் மற்றும் அணையாவிளக்கில் தாங்கள் கொண்டுவந்த நெய்யை ஊற்றி வழிபாடு செய்துவருகின்றனர். வரிசையில் நிற்கும் வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகையையொட்டி கூட்டநெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக ஆலய நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேபோல பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்களின் வருகையை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.