திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வெளிப்பிரகாரத்தில் கருங்கல் பதிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மண் சமன் செய்யப்பட்டு வருகிறது. அப்பொழுது கல்யாண விநாயகர் மண்டபத்தின் சுற்றுச் சுவர் அடிபீடத்தில் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் கூறியதாவது; கோவில் வெளிப்பிரகார ராஜகோபுரத்தின் வடக்கு பகுதியில் இருந்த மண்மேடு, கருங்கல் பதிப்பதற்காக அகற்றப்பட்டது. அப்போது கல்யாண விநாயகர் மண்டபத்தின் அடிபீடத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு காணப்பட்டது. அதனை விழுப்புரம் வீரராகவன், நுாலகர் அன்பழகன், கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர். கல்வெட்டில், ‘ஆறகளூரை தலைநகராகக் கொண்டு மகதை மண்டலத்தை அரசாண்டவன் வாணகோவரையன் பொன்பரப்பின பெருமாள் என்பவன், இங்குள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு நிலம் தானம் கொடுத்து விளக்கு எரிப்பதற்கு இக்கோவில் திருவுண்ணாழி சடையாரிடம் வழங்கப்பட்டதும், சிறுபடி காவலர்கள் (சோழர் காலத்தில் வாணிப பாதைகளில் களவு ஏற்படாமல் பாதுகாப்பதற்காக பணியாற்றும் காவல் பிரிவினர்) மூலம் வரும் வருவாயை சபையாரிடம் அளித்து இத்தர்மத்தை சூரியன், சந்திரன் உள்ளவரை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் சபையார் இதை இறக்குவோர் (இத்தர்மத்தை தொடர்ந்து செய்யாவிட்டால்) கங்கையிடை, குமரியிடை, குரால் பசுக்குத் தீங்கு செய்த பாவத்திலே போவார்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது. இது கி.பி., 1209 க்கு முந்தைய மூன்றாம் குலோத்துங்கனின் 31ம் ஆட்சி ஆண்ட கல்வெட்டு என உதியன் கூறினார்.