கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, வடசித்துார் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி மயிலந்தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வடசித்தூரில், ஹிந்துக்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய குடும்பத்தினரும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் உறவினர்களாக பழகி வருவதால், ஆண்டு தோறும் மயிலந்தீபாவளியில் இஸ்லாமியர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும், ஜாதி மத இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக பண்டிகையை கொண்டாடுவார்கள். மயிலந்தீபாவளியை நாளான நேற்று, வடசித்துார் ஊராட்சி அலுவலகம் அருகே, ராட்டிணங்கள், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகள், அமைக்கப்பட்டு ஊரே திருவிழா கோலமாக காட்சியளித்தது. திருமணமாகி வெளியூரில் வசிக்கும் பெண்களும் குடும்பத்துடன், பெற்றோர் வீட்டிக்கு வந்து மயிலந்தீபாவளியை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இங்கு வசிக்கும், ஹிந்து, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையுடன் மயிலந் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இஸ்லாமியர்களை, தங்களது வீட்டுகளுக்கு அழைத்து ஹிந்துக்கள் விருந்து வைத்து, ஒருவருக்கொருவர் நட்பை பகிர்ந்து பண்டிகையை கொண்டாடினார்கள். பருவ மழை பெய்தாலும் பண்டிகைக்கு வரும் நபர்கள் எண்ணிக்கை குறையாமல் வடசித்தூர் முழுவதும் விழா கோலமாக காட்சியளித்தது.