முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார விழா நாளை திருக்கல்யாணம்
பதிவு செய்த நாள்
27
அக் 2025 11:10
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹாரத் திருவிழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. பொள்ளாச்சி, சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா கடந்த, 21ம் தேதி, அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து கந்தசஷ்டி உற்வசம், காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப்பெருமானுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது. பக்தர்களும் விரதம் துவங்க கைகளில் காப்பு கட்டிக் கொண்டனர். நேற்று, வேல்வாங்கும் உற்சவமும் நடந்தது. இன்று, மாலை, 4:30 மணிக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமையில் சூரசம்ஹாரமும் நடக்கிறது. நாளை, காலை, 10:00 மணிக்கு மஹா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.* குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், நான்காம் ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த, 22ல், கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, மாரியம்மனிடம் இருந்து முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, மாலை, 4:00 மணிக்கு ஊர் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மஹா அபிஷேகம், இரவு, 9:00 மணிக்கு தீபாராதனை நடத்தப்படுகிறது. நாளை, காலை, 7:45 மணிக்கு திருக்கல்யாணம், காலை 8:45 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும், மதியம்: 12:00 மணிக்கு அன்னதானம் நடத்தப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். உடுமலை உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் கந்த சஷ்டி, சூரசம்ஹார திருவிழா இன்று நடக்கிறது. காலை 8:30 மணிக்கு, யாகசாலை வேள்வி பூஜை, அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனையும், மாலை 3:15 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம், மாலை 4:00 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு, கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. * பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், மாலை 4:00 மணிக்கு, நடை திருக்காப்பிடுதல், வீரவேல் முருகன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளல், நவவீரர்கள் புடை சூழ ஸ்ரீ வீரபாகு தேவர் போர்க்கோலம் பூண்டு புறப்பாடு, மாலை 5:00 மணிக்கு மேல், சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் குறித்து, அவிநாசி திருப்புக்கொளியூர் வாகிசர் மடாலயம், காமாட்சிதாச சுவாமிகள் கூறுகையில், ‘‘ஞானவே வடிவானவன் கந்தன் என்பதை வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன. இந்த கந்த சஷ்டி பெரு விழாவில், மாயை என்னும் கூட்டத்தில் சிக்கிய மக்கள் தெளிவு பெற்று அசுர குணத்தை நீக்கி, அன்பு, கருணை ஆகிய நல்ல எண்ணங்களை மேற்கொண்டு, சமயம் காக்க, சூரனை வென்ற இந்நாளில் சபதம் ஏற்போம்,’’ என்றார். வால்பாறை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வாக இன்று (27ம் தேதி) காலை, 12:00 மணிக்கு எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலிருந்து, சூரனை வதம் செய்ய அன்னையிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டு, ஸ்டேன்மோர் சந்திப்பு, காந்திசிலை, சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புறத்திலும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (28ம் தேதி) காலை, 10:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கந்தசஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர். – நிருபர் குழு –:
|