திருப்புத்தூரில் அன்னாபிஷேகம் முடிந்து சீதளிக்குளத்தில் கரைக்கப்பட்ட அன்னம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2025 11:11
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்து சீதளிக்குளத்தில் அன்னம் கரைக்கப்பட்டது.
அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான உணவையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. திருத்தளிநாதர் கோயிலிலும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் திருத்தளிநாதருக்கு காலை 11:00 மணிக்கு ரமேஷ் குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னம், காய்கறிகளால் மூலவருக்கு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் அலங்காரத்திலிருந்து எடுக்கப்பட்ட அன்னத்துடன் சிவாச்சார்யர்கள், பக்தர்கள் கோயிலிலிருந்து புறப்பட்டு தெப்பக்குளமான சீதளிக்குளத்திற்கு சென்றனர். அங்கு சீதளி தீர்த்தத்தில் அன்னம் கரைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கோயில் புறப்பாடாகி மூலவருக்கு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் அன்னாபிஷேகத்தை தரிசித்தனர்.