பதிவு செய்த நாள்
09
நவ
2025
12:11
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும் ஆன்மீக அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள கோவில் காடுகள் திட்டத்தின் துவக்க விழா நடந்தது.
மயிலாடுதுறை, தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின், 60வது மணிவிழா, நவ., 1 முதல் 10ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும் ஆன்மீக அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள கோவில் காடுகள் திட்டத்தின் துவக்க விழா வள்ளாலகரம், வதாரண்யேசுவரர் கோவிலில் கடந்த, 7ம் தேதி நடந்தது. இத்திட்டத்தின் முதல் மரக்கன்றை, தருமை ஆதினத்தின் இளைய சன்னிதானம் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் நடவு செய்து துவக்கி வைத்தார். இதில், தருமை ஆதினத்தின் நிர்வாகி பாலாஜி பாபு, ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த சன்னியாசிகள் சுவாமிகள் அலோகா, கைலாசா மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தருமை ஆதினத்தின் இளைய சன்னிதானம் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் பேசுகையில்,"ஈஷாவின் காவிரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதினம் இணைந்து ஒவ்வொரு கோவில்களிலும் ஆயிரம் மரக்கன்றுகள் என, ஆதினத்திற்கு உட்பட்ட 60 கோவில்களில், மரக்கன்றுகள் நடப்பட்டு கோவில் காடுகள் உருவாக்கும் பணி இங்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நம் வழிபாட்டில் மரம் என்பது இறைவனாகவே பார்க்கப்படுகிறது. மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்று சொல்லும்போது, ஒவ்வொரு தலத்திற்கும் தலவிருட்சம் உண்டு. ஒவ்வொரு கோவிலிலும் இறைவன் மரத்தின் வடிவமாகவே இருக்கிறார் என்பது, சைவ சமயத்தின் மற்றும் இந்திய பண்பாட்டின் நம்பிக்கை. அப்படிப்பட்ட மரங்களை நாம் நிறைய வளர்ப்பதன் மூலம் மழை பொழிந்து இயற்கை காக்கப்படும் என்ற உன்னத நோக்கிலேயே நம் முன்னோர்கள், கோவில் காடுகள், தலவிருட்சம் போன்றவற்றை உருவாக்கியிருந்தனர். இதை உணர்ந்து, ஈஷா யோகா மையமும், நமது ஆதினமும் சேர்ந்து, குரு மகா சன்னிதானத்தின், 60வது ஆண்டு நிறைவு மணிவிழாவில், கோவில் காடுகள் திட்டத்தை நிகழ்த்துவது மகிழ்ச்சிக்குரியது. இது தொடர்ந்து நாடெங்கும் நிறைய நடந்து, இம்மண்ணில் வளமும், நலமும் பெருக, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்,"என்றார்.