மடப்புரம் கோயிலில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு, காவலாளிகள் இல்லாததால் அச்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2025 02:11
திருப்புவனம்; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளிகள் இல்லாததால் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் உண்டியல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று,
கோயிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆடி வெள்ளி உள்ளிட்ட நாட்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வந்து செல்லும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மடப்புரம் கோயிலில் மொத்தம் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உண்டியல்களில் இருந்து அறநிலையத்துறைக்கு 25 லட்ச ரூபாய் வரை பணமும், சுமார் 200 கிராம் தங்கம்,வெள்ளி இனங்களை பக்தர்களின் காணிக்கை மூலம் கிடைத்து வருகிறுது. இதுதவிர வாரம் தோறும் அம்மனுக்கு சார்த்தப்படும் பட்டுப்புடவைகள் மூலம் தனியாக வருவாய் கிடைத்து வருகிறது. கோயிலில் அறநிலையத்துறை சார்பில் இரவு மற்றும் பகல்களில் தலா இரண்டு காவலாளிகள் வீதம் 24 மணிநேரமும் நான்கு காவலாளிகள் பணிபுரிந்து வந்தனர். வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் அனைவரும் ஓய்வு பெற்ற பின் புதிய காவலாளிகள் நியமிக்கப்படவே இல்லை. கடந்த ஒரு வருடமாக காவலாளிகள் இல்லாததால் பக்தர்கள் அச்சத்துடன் உள்ளனர். பகலில் பக்தர்கள் கூட்டத்தை கண்காணிப்பது , ஒழுங்குபடுத்துவது என காவலாளிகள் ஈடுபடுவது வழக்கம், கடந்த ஒரு வருடமாக காவலாளிகள் இல்லாததால் கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் தினசரி ஒருவர் வீதம் இரவு காவல் பணி புரிகின்றனர். இதனால் ஊழியர்கள் மனக்குழப்பத்தில் உள்ளனர். பலமுறை அறநிலையத்துறைக்கு இரவு காவலாளிகள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. மடப்புரம் கோயிலில் ஏற்கனவே அம்மனின் மூக்குத்தி மாயமானது, கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த தங்க கொலுசை திருடியது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால் விரைவில் கோயிலுக்கு காவலாளி பணியிடங்களை நிரப்ப அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.