தீபத்துாணா, நில அளவைக்கல்லா? திருப்பரங்குன்றத்தில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு
பதிவு செய்த நாள்
11
டிச 2025 11:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் இருப்பது தீபத்துாணா, நில அளவைக்கல்லா என, தமிழக அரசு தொல்லியல் துறையினர் நேற்று மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை முதன்மை செயலர் அனுப்பிய கடிதத்தின் படி, மதுரை கலெக்டர் உத்தரவில், நேற்று காலை, 8:10 மணிக்கு தொல்லியல் துறை துணை இயக்குனர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறை குழுவினர், திருப்பரங்குன்றம் மலை மேல் சென்றனர். அங்கு, மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்து, தீபத்துாணை அளவீடு செய்து, காலை, 11:45 மணிக்கு புறப்பட்டனர். அவர்களுடன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, ஆர்.ஐ., திருக்கண்ணன், வி.ஏ.ஓ.,க்கள் சுந்தரேசன், முத்துசாமி, மனோஜ் சென்றனர். ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் எம்.சோலைகண்ணன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாதது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ளது எல்லை கல்லா, தீபத்துாணா என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தது கண்டிக்கத்தக்கது. தீபத்துாண் இருந்ததற்கான ஆதாரங்கள், ஆவணங்கள், சட்டத்தின் அடிப்படையில், தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என, நீதிபதி தீர்ப்பளித்ததை மதிக்காமல், சிறுபான்மையினர் ஓட்டுக்காகவும், அவர்களை குளிர வைக்கவும், ‘தீபத்துாணில் தீபம் ஏற்ற விடமாட்டோம்; அது எல்லைக்கல்’ எனக்கூறும் தமிழக அரசு, இத்தனை நாட்கள் கழித்து தமிழக தொல்லியல் துறையை ஆய்வு செய்ய அனுப்பியது, மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகிறது. தீபத்துாணை, தொல்லியல்துறை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா? தமிழக தொல்லியல் துறை, மலையை ஆய்வு செய்ய போகிறோம் என உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனரா? ஆய்வுக்கு செல்லும் போது, வழக்கு தொடர்ந்த மனுதாரரையோ, மாவட்ட நீதிபதி ஒருவரையோ ஏன் அழைத்து செல்லவில்லை? நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிப்பதற்கு முன், மலை மீதுள்ள தீபத்துாணை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்துள்ளார். அப்படி இருக்கையில், தமிழக தொல்லியல் துறை எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? தன் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக தொல்லியல் துறையை ஏவி, தீபத்துாணில் உள்ள ஆவணங்களை அழித்து, அது எல்லைக்கல் தான் என நிறுவ, அரசு பார்க்கிறது. நீதிபதிகள் உத்தரவு இன்றி, தீபத்துாணை ஆய்வு செய்த தமிழக அரசின் தமிழக தொல்லியல் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மத்திய அரசு இவ்விவாகரத்தில் தலையிட்டு, தீபத்துாணை ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தர்ஹா, கலெக்டர் ஆபீசுக்கு மிரட்டல்: மதுரை கலெக்டர் அலுவலகம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹா ஆகியவற்றுக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சமீபத்தில் பிரச்னை உருவானது. இதையடுத்து, 144 தடை உத்தரவு போடப்பட்டு, மலைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியில் உள்ள வீடுகளுக்கு செல்வோரையும் கடும் சோதனைக்கு பின்பே அனுமதிக்கின்றனர். மலைமீதுள்ள தர்ஹா, தீபத்துாண் பகுதியிலும் கண்காணிப்பு உள்ளது. குண்டு மிரட்டல் வந்ததும், நேற்று மாலை போலீசார், மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் சகிதமாக சோதனையிட்டனர். இறுதியில் புரளி என தெரிந்தது. மேலுார் ரோட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனைக்கு பின் அதுவும் புரளி என, தெரிந்தது.
|