பதிவு செய்த நாள்
03
ஜன
2013
10:01
கோபிசெட்டிபாளையம்: தமிழகத்திலேயே முதல்முறையாக, கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவுக்காக, 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. கோபி அருகே உள்ள பாரியூர், முற்காலத்தில் மிகப்பெரிய பட்டணமாக இருந்துள்ளது. 13ம் நூற்றாண்டில் நடந்த போரில், ஊர் சிதைந்ததாக வரலாறு கூறுகிறது. இங்குள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. காளியம்மன், அமர்ந்த நிலையில், எட்டு கைகளுடன், மகிஷாசுரனை வதம் செய்தவாறும், கோபம் தணிந்து சாந்த சொரூபியாகவும் அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும், ஜனவரியில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு குண்டம் திருவிழா, டிசம்பர், 27ல் துவங்கியது. நாளை, தேர் வெள்ளோட்டமும்; 10ம் தேதி குண்டம் இறங்குதலும்; 11 தேதி மாலை, 4:00 மணிக்கு தேர்திருவிழாவும் நடக்கிறது. குண்டம் திருவிழாவில், பல்வேறு ஊர்களை சேர்ந்த, 50 ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்குவர். குண்டம் இறங்கும் பக்தர்கள், இரண்டு நாட்களுக்கு முன், கோவிலில் குவிந்து விடுவர். குண்டம் விழாவன்று, 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று குண்டம் இறங்குவர். கோபி, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், 20 பேர் குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனால், பாரியூரில் குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களுக்கு நிதியுதவி செய்யும் வகையில், கொண்டத்து காளியம்மன் பெயரில்,கோவில் நிர்வாகம் சார்பில், 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில், தேர்களுக்கு மட்டுமே இதுவரை இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக, பாரியூர் குண்டம் திருவிழாவுக்கு, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தான்தோன்றியம்மன் கோவில் சம்பவத்துக்கு பின், முதல் முறையாக பாரியூர் குண்டம் திருவிழாவுக்கு, அம்மன் பெயரில், 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டதால், இதில் இருந்து இன்சூரன்ஸ் தொகை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.