பதிவு செய்த நாள்
03
ஜன
2013
10:01
நகரி: திருப்பதி திருமலையில், மூலவர் வெங்கடாஜலபதியை பக்தர்கள் மிக அருகில் தரிசிக்க, புதிய நடைமுறையை பின்பற்ற, தேவஸ்தானம் பரிசீலனை செய்கிறது. திருமலை கோவில் சன்னதியில், ராமுல வாரி மேடை அமைந்துள்ள இடத்திற்கு, இரு பக்கத்திலும் துவாரங்கள் அமைத்து, மூலவர், வெங்கடேச பெருமாளை, 30 அடி தூரத்தில், பக்தர்கள் தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த, தேவஸ்தானம் முயற்சி மேற்கொள்கிறது. "நேத்ர துவாரம் எனப்படும், இந்த முறையை, ஆகம பண்டிதர்களிடம் ஆலோசித்து, அவர்களின் ஒப்புதல் பெற்ற பின் செய்ய, அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர். "ராமுல வாரி மேடைக்கு, இரு பக்கத்திலும் துவாரம் ஏற்படுத்தினால், எந்த தவறும் இல்லை. துவாரம் ஏற்படுத்த முடிவு செய்துள்ள இடத்தில், "ஏசி பெட்டிகள் வைக்க, பெரிய துவாரம் உள்ளது என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த துவாரத்தையே, சற்று பெரியதாக செய்தால், நேத்ர துவாரம் மூலம், பெருமாளை நன்கு தரிசிக்கலாம் என்பது, தற்போது ஆலோசிக்கப்படுகிறது. கோவிலில் மூலவருக்கு மிக அருகில் உள்ள துவாரம், குலசேகரபடி. முக்கிய பிரமுகர்கள், 2,000 பேர் இந்த இடத்தில் நின்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர். நடைமுறையில் உள்ள, தொலை தூர தரிசனம் மூலம், 67 ஆயிரம் பேர், தினமும் தரிசிக்கின்றனர். "பக்தர் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில், கோவில் முதல் வாசற்படி அமைந்துள்ள, ஜெய விஜயர் அருகில் நின்றபடி, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இது, பக்தர்களுக்கு சிரமமாக உள்ளதால், நேத்ர துவாரம் மூலம், சுவாமியை நன்கு தரிசிக்க, ஏற்பாடு செய்ய முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.