திருப்பூர் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் பரவசம்
பதிவு செய்த நாள்
03
ஜன 2026 01:01
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் தாயார் சிவகாமியுடன் நடராஜர் அருள்பாலித்தார். திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி உள்ளிட்ட சிவாலயங்களில் இன்று அதிகாலை நடராஜர் – சிவகாமியம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. நேற்று, திருக்கல்யாண உற்சவம்விமரிசையாக நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும், மார்கழி மாதத்தில், மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. ஒன்பதாம் நாள், சுவாமி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. பத்தாவது நாளான இன்று, ஆருத்ரா தரிசன விழா இன்று கொண்டாடப்படுகிறது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் ஸ்ரீநடராஜர் – சிவகாமியம்மன், பட்டி விநாயகரை சுற்றி வந்தும், திருவீதியுலா சென்றும் அருள்பாலிக்கின்றனர். அதற்கு முன்னதாக, நேற்று, பிச்சாடனர் கோலத்தில் சிவபெருமான் திருவீதியுலா சென்று, அரிசி யாகசகம் பெற்று வந்தார். பக்தர்கள், காணிக்கை மற்றும் அரிசியை காணிக்கையாக செலுத்தி வணங்கினர். ஆருத்ரா தரிசன நாளான இன்று, திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும், அதிகாலை, 3:00 மணிக்கு, நடராஜர் – சிவகாமியம்மனுக்கு மகா அபிேஷகம் நடந்தது. திருவாதிரை நட்சத்திர நாளான இன்று, காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து, ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்மன், தனி சப்பரங்களில் எழுந்தருளி, பட்டி விநாயகரை வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே, ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்மன், திருவீதியுலா வருகின்றனர். தேர்த்திருவிழா தரிசன நாளிலும், ஆருத்ரா தரிசன நாளிலும், கனகசபையில் இருந்து வெளியே வருகின்றனர் குறிப்பாக, ஆருத்ரா தரிசன நாளில் தான், அம்மையப்பர், பட்டி விநாயகரை, 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத நிகழ்ச்சி நடக்கும். எனவே, பக்தர்கள், குழந்தைகளுடன் தம்பதி சமேதராக வந்து, அம்மையப்பரை தரிசனம் செய்து அருள்பெறலாம் என, சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.
|