பதிவு செய்த நாள்
04
ஜன
2026
12:01
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் படம் வீதியுலா நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழாவின் போது, நந்தனார் மடத்தில் இருந்து நந்தனார் பட ஊர்வலம் நடைபெறுவது தொன்று தொட்டு நடைபெறும் நிகழ்வாகும்.
அந்த வகையில், ஆருத்ரா தரிசன விழாவான நேற்று, சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் இருந்து நந்தனார் படம் ஊர்வலம் துவங்கி, நடராஜர் கோவில் தெற்கு சன்னதியை வந்தடைந்தது, அங்கிருந்து நடராஜருக்கு ஆரத்தி காட்டிய பின், நகர வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
நந்தனார் கல்விக் கழக தலைவர் மணிரத்தினம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, சமத்துவ மக்கள் படை நிறுவனர் சிவகாமி, நந்தனார் பட ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தை சென்றடைந்தது. கீழ சன்னதியில் நந்தனாருக்கு பொதுதீட்சிதர்கள் சார்பில், வரவேற்பு அளித்து, சிறப்பு செய்தனர்.
ஊர்வலத்தில் நந்தனார் கல்விக்கழக பொருளாளர் ஜெயச்சந்திரன், செயலாளர் திருவாசகம், டிரஸ்ட் செயலாளர் வினோபா, நிர்வாகிகள் கஜேந்திரன், ரவி, இளைய அன்பழகன், பன்னீர்செல்வம், கனகசபை, தெய்வசிகாமணி, கமலக்கண்ணன், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.