திருப்பரங்குன்றத்துடன் சுடுகாட்டை ஒப்பிடுவதா? அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2026 10:01
பல்லடம்; திருப்பரங்குன்றம் விவகாரத்துடன் சுடுகாட்டை ஒப்பிட்டு பேசுவதா? என, சட்டத்துறை அமைச்சருக்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது: ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், மேல் முறையீடு செய்த தமிழக அரசுக்கு, கோர்ட் நல்ல பாடம் புகட்டி உள்ளது. கோர்ட் தீர்ப்பினை தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் வரவேற்றுள்ளனர். இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை தமிழக அரசு மதிக்காத நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கோர்ட்டை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. சாமானிய மக்கள் கோர்ட் உத்தரவை மீறினால், உடனடியாக அவர்களை கைது செய்வதும், சிறையில் அடைப்பதுமான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடுகிறது. இடுவாய் கிராமத்தில், குப்பை கொட்டுவதற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய மக்கள் மீதான நடவடிக்கையே இதற்கு உதாரணம். கோர்ட் உத்தரவையும், சட்டத்தையும் மதித்து அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது போலீசாரை ஏவி விட்டு தமிழக அரசு அராஜகத்தில் ஈடுபட்டது. இவ்வாறு இருக்க, ஒரு சட்டத்துறை அமைச்சர், கோர்ட் தீர்ப்பை மதிக்காமல், மனம் போன போக்கில் பேசுகிறார். கோர்ட் உத்தரவை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.