குமரகோட்டத்தில் கும்பாபிஷேகம் மார்ச் மாதத்தில் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2026 11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் மார்ச் மாதத்தில் நடைபெறும். நாள் குறித்து முறையான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என, கோவில் செயல் அலுவலர் கேசவன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி நடந்தது. இந்நிலையில் கோவிலில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள், உட்பிரகார சன்னிதிகள் பொலிவிழந்த நிலையில் இருந்தன. இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், குமரகோட்டம் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பணி துவக்குவதற்கான பாலாலயம் கடந்த 2024ம் ஆண்டு பிப்., மாதம் 26ம் தேதி நடந்தது. இதையடுத்து உபயதா ரர் நிதியில் இருந்து, 66.48 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் துவக்கப்பட்டு, ராஜகோபுரம், ரிஷிகோபுரம், கந்தபுராண மண்டபம் உள்ளிட்ட 16 திருப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங் களில் பரவி வரும் தகவல் தவறானது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது: குமரகோட்டம் கோவில் கும்பாபிஷேகம் 8ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் தவறானது. கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. குமரகோட்டம் கோவிலில் நடந்து வரும் 16 திருப் பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பிப்., மாதம் இறுதிக்குள் அனைத்து திருப்பணிகளும் முடிக்கப்பட்டு, மார்ச் மாதத்தில் எந்த நாளில், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பது குறித்து முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.