திருப்புல்லாணியில் கோலாகலமாக நடந்த ராபத்து உற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2026 03:01
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் கடந்த டிச., 20 அன்று பகல் பத்து உற்ஸவம் துவங்கியது. பின்னர் டிச., 30 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து ராபத்து உற்ஸவம் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தொடர்ந்து பத்து நாட்களும் தெர்ப்பசயன ராமர் சன்னதி அருகே உள்ள சொர்க்கவாசல் வழியாக உலா வந்து இருப்பு நிலையை அடைந்து பின்னர் சாற்று முறை கோஷ்டி பாராயணம் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் உள்ளிட்டவைகள் பாடப்பட்டன. ராபத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று இரவு 7:35 மணிக்கு அலங்காரப் பல்லக்கில் நாராயணா கோவிந்தா கோஷம் முழங்கி சேவை சாதித்தார். அச்சமயத்தில் திருவாய்மொழி பாடப்பட்டு நம்மாழ்வார் பெருமாள் திருவடி தொழுதல் நிகழ்ச்சி நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பகல் பத்து நாட்களும் பின்னர் இரவு பத்து நாட்களும் 20 நாட்கள் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் கோலாகலமாக விழா துவங்கி நிறைவடைந்தது. பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.