பதிவு செய்த நாள்
05
ஜன
2013
11:01
பல்லடம்: பகவானை அடைய உண்மையான பக்தி தேவை, என சொற்பொழிவாளர் தாமோதர தீட்சிதர் பேசினார்.ஸ்ரீமத் பாகவத மஹா புராண சொற்பொழிவு, பல்லடம் வைஸ் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. ஸ்ரீகபிலாவதாரம் என்ற தலைப்பில் சேங்காலிபுரம் தாமோதர தீட்சிதர் பேசியதாவது: மனதுக்கு தனி வடிவம் கிடையாது; இடைவிடாமல் எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கும்; அலைபாய விடாமல் இருக்கச் செய்ய வேண்டும். ஒரு மனிதன் இறக்கும் தருவாயில், மனைவி, மகன், மகள், சொத்து ஆகியவற்றை விட்டுச் செல்கிறோமே என நினைத்தால், மறுபிறவி உண்டு. மறுபிறவி எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், இறக்கும் தருவாயில் பகவானை நினைக்க வேண்டும். நாம் தர்மம் செய்யும்போது, இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம் என நினைக்கக் கூடாது. நமது பாக்கியம் கொடுக்கிறோம் என நினைக்க வேண்டும். இதுவே சிறந்த தர்மம். துணி கொடுக்காமல் திதி கொடுக்கக் கூடாது. துணி கொடுக்காமல் திதி கொடுப்பதால் பலன் இல்லை. திதி கொடுக்கும்போது தரமான துணிகளையே கொடுக்க வேண்டும். கடமைக்காக தரமற்ற துணிகளை திதியாக கொடுக்கக் கூடாது. தானம் செய்தால் மட்டுமே ஒரு மனிதன் சிறப்பாக வாழ முடியும். மரணத்தை கண்டு பயப்படாதவனே உண்மையான வீரன். ஜனனத்துக்கு முடிவு மரணம் மட்டுமே. பிறப்பு என்பது மரணத்தை நோக்கிய நிலை என்பதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சாஸ்திரப்படி எந்த கலி முற்றினாலும், நல்லவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சாதுக்கள் நமது வீட்டுக்கு வந்தால் என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்டு, அவர்களுக்கு, அந்த உணவை அளிக்க வேண்டும். அவர்களை பட்டினி போட்டால் நல்லதல்ல. ஒரு குருவானவர் எந்த தகுதியும் இல்லாதவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். திறமையானவர்களை மட்டும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருபவர் குரு அல்ல. பகவானை அடைய கால நிர்ணயம் செய்யப்படவில்லை. நாளை நாம் இருப்போம் என்பது நமது கையில் இல்லை. எல்லாம் பகவான் கையில் உள்ளது. பகவானை தினமும் நினைத்து வணங்க வேண்டும். தற்போது, 90 சதவீத சன்னியாசிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர்; சொகுசு காரில் செல்கின்றனர்; குளிர்சாதன அறையில் தங்குகின்றனர். பற்றற்ற நிலையில் உள்ளவர்களே உண்மையான சன்னியாசி. பரமாச்சாரியார் வாகனத்தில் சென்றது கிடையாது; பணத்தை கையால் தொட்டது கிடையாது. இரவு 12.00 மணிக்கு தூங்கச் சென்று அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து விடுவார். அவரே உண்மையான சன்னியாசி. பகவானை அடைய உண்மையான பக்தி தேவை. இவ்வாறு, அவர் பேசினார்.