பதிவு செய்த நாள்
05
ஜன
2013
11:01
15 ஆயிரம் பேருக்கு மட்டுமே "திவ்ய தரிசன டோக்கன்: திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இனி, நாள் ஒன்றுக்கு, 15 ஆயிரம், "திவ்ய தரிசன டோக்கன்களை மட்டுமே வழங்க, திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருப்பதி, திருமலையில் குடிகொண்டுள்ள, வெங்கடேச பெருமாளை தரிசிக்க, தொலை தூரங்களில் இருந்தும், திருப்பதியில் இருந்தும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு வழியாக, பாத யாத்திரையாக பக்தர்கள் செல்கின்றனர்.இவ்வாறு செல்லும் பக்தர்கள், துரிதமாக தரிசனம் செய்வதற்காக, பாதயாத்திரை பாதையில், காலிகோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள கவுன்டர் மூலம், "திவ்ய தரிசனம் என, பெயரிடப்பட்டு இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை, மூன்று ஆண்டுகளுக்கு முன் தேவஸ்தானம் அமல்படுத்தியது.இதனால், பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. "திவ்ய தரிசன டோக்கன் திட்டத்தை அமல்படுத்தும் முன், சராசரியாக நாள் ஒன்றுக்கு, 5,000 பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். தற்போது, திங்கள் முதல் வெள்ளி வரை, 20 ஆயிரம் பேர் வருகின்றனர். சனி, ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களிலும், இதர விடுமுறை நாட்களிலும், 30 ஆயிரம் பேர் வருகின்றனர்.பாத யாத்திரையாக வருபவர்களுக்கு, அதிக எண்ணிக்கையில்,டோக்கன் வழங்குவதால், திருமலையில் இலவச தரிசன பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை உணர்ந்த தேவஸ்தான நிர்வாகம், இனி நாள் ஒன்றுக்கு, 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே, திவ்ய தரிசன டோக்கன்களை வழங்க முடிவு செய்து உள்ளது. அத்துடன், திவ்ய தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள், அன்றைய தினம் இரவு, 7:00 மணிக்குள் திருமலை கோவிலில், வைகுண்டம்-1 வழியாக, சாமி தரிசனத்திற்கு செல்ல ஆஜராக வேண்டும். இல்லையெனில், பெற்ற டோக்கன் செல்லுபடி ஆகாது. இந்த நடைமுறை நேற்று முன் தினம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.