பதிவு செய்த நாள்
05
ஜன
2013
02:01
கருப்பணசாமிக்கு, நம்மூரில் பல அவதாரம் உண்டு. வாகனங்களுக்கு பிரத்யோக கருப்பணசாமி திண்டுக்கல் அய்யலூரில் வீற்றிருக்கிறார். திருச்சி நான்குவழிச்சாலை, ரயில்பாதை அருகே அருள் புரியும் அவரை, வழிபடுவதிலும் வினோத முறை கடைபிடிக்கப்படுகிறது. வாகனத்திற்கு விபத்து விலக, புதிய வாகனம் வாங்க, வண்டிக்கருப்பணசாமியை வழிபடு கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். புதன், வெள்ளி, ஞாயிறு சென்றால், அங்கு நடக்கும் கிடா விருந்துகள், அதற்கு சாட்சி. கோயில் நிர்வாகத்தை தங்கம்மாபட்டியினரும், பூஜை வழிபாட்டை குப்பாம்பட்டியினரும் தொடர்ந்து வருகின்றனர்.
வண்டிக்கருப்பணசாமி எப்படி உருவானார்? விடை தருகிறார், தங்கம்மாபட்டி நேரு: கேரளாவைச் சேர்ந்த சிலர், மாட்டு வண்டியில் கருப்புச்சாமி சிலையுடன் திருச்சிக்கு சென்றனர். இவ்வழியாக வந்த போது, வண்டி நகர முடியவில்லை. சிலையை கீழே இறக்கிய பிறகே, வண்டி நகர்ந்தது. அவர்கள் விட்டுச் சென்ற சிலையை, தங்கம்மாபட்டி கிராமத்தினர், பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். கோரிக்கைகள் நிறைவேறும் போது, குட்டி, முட்டி படையல் (மண்பானையில், ஆட்டுக் குட்டி கறி சமைத்து) வைத்து, கருப்பனை மகிழ்வித்தனர். ஆங்கிலேயர் காலத்தில், இவ்வழியே ரயில் போக்குவரத்து இயக்க சிரமப்பட்டனர். கிராமவாசிகள் ஆலோசனைப்படி, ஆடு வெட்டி பூஜை செய்த பிறகே, ரயில் போக்குவரத்தின் சிரமம் தீர்ந்தது. அதன்பின், கோயிலின் புகழ் பரவி, வண்டிக்கருப்பணசாமி என்ற, பெயர் ஏற்பட்டது, என்றார். தங்கம்மாபட்டி, முடக்குபட்டி, புதூர், பொட்டி நாயக்கன்பட்டி, கருஞ்சின்னானூர், செம்பன்பழனியூர், வால்பட்டி கிராமத்தினர் ஒன்று கூடி, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை புரவி எடுப்பு நடத்துகின்றனர். குட்டி, முட்டி படைத்தால், வாகனம் முட்டாது (விபத்தாகாது) என்ற, இவர்களின் நம்பிக்கைக்கு, வழிவிடும் கருப்பணை, நாமும் வணங்குவோம்!