பதிவு செய்த நாள்
05
ஜன
2013
01:01
ரயில் பயணம் என்றாலே, குட்டீஸ்களுக்கு குதூகலம்; அது என்ன மாயமோ தெரியல... அபிராமி... அபிராமி.... அதே ரயில் மலையில் ஏறினால், குதூகலத்திற்கு குறைவிருக்குமா என்ன? மலை ரயில் கேள்விப்பட்டுஇருப்பீர்கள், மலையில் ஏறும் ரயிலை பார்க்க, திண்டுக்கல் மாவட்டம் பழநிக்குதான் வரவேண்டும். மலைக்கோயில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். 426 மீ., உயரமுள்ள மலைக்கோயிலை அடைய, 689 படிகள் கொண்ட பாதையை கடக்க வேண்டும். இல்லையேல், யானை பாதை வழியாக வரவேண்டும். இருபாதையும் எளிதல்ல என்பதால், மின் இழுவை ரயில் (வின்ச்) வசதி செய்யப்பட்டது. பின்னர் ரோப்கார் வசதி செய்யப் பட்டாலும், வின்ச் வரவேற்பை மிஞ்ச முடியவில்லை. அதற்கான உபகரணங்கள் அனைத்தும், ஜப்பானிலிருந்து இறக்குமதி ஆனவை. 1964ல் முதல் வின்ச் பயணம், தொடங்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பு, 1984ல் இரண்டாவது, 1993ல் மூன்றாவது வின்ச் இயக்கப்பட்டது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் வின்ச் பயணத்திற்கு, குறைந்த கட்டணம் ரூ.10 மட்டுமே. அதன் மூலம், தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. 2011-12ல் கிடைத்த வருவாய் என்ன தெரியுமா? ரூ.3 கோடியே 38 லட்சத்து 61 ஆயிரம். பலர் விரும்பும் பயணம் இதுவென்பதை நிரூபிக்க, இந்த ஓர் உதாரணம் போதுமே! பக்திக்கு மட்டுல்ல, பார்வைக்கும் நிறைய விஷயம் பழநியில் இருக்கு; வாங்க, ஜாலியாய் போங்க!