பதிவு செய்த நாள்
07
ஜன
2013
10:01
சபரிமலை: சபரிமலையில், மகரவிளக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கின. ஜன., 14 காலை 6.56 மணிக்கு மகர சங்கரம பூஜை, மாலை 6.30 மணிக்கு மகரவிளக்கு பெருவிழா நடக்கும். மகரவிளக்கு பெருவிழாவுக்கு, இன்னும் ஏழு நாட்கள் உள்ளன. பம்பை, கோயிலில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மகர விளக்குக்கு முன்னோட்டமான சுத்திகிரியைகள், ஜன., 12 ல் தொடங்குகின்றன. அன்று மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில், பிரசாத சுத்திகிரியைகள் நடக்கும். இதில் ரக்ஷா கலசம், வாஸ்துஹோமம், வாஸ்து பலி பூஜைகள் இடம் பெறும். ஜன., 13 ல், பிம்பசுத்தி கிரியைகளுக்குப் பின், ஐயப்பனுக்கு கலச அபிஷேகம் செய்யப்படும். ஜன., 12 பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரணம், 14 ம் தேதி மாலை 6.15 மணிக்கு, சன்னிதானம் வரும். ஆபரணங்களை சுவாமிக்கு அணிவித்து தீபாராதனை நடக்கும். இதற்குப் பின், பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு பிரகாசிக்கும். மகரவிளக்கு நாளில், சபரிமலையில் "மகரசங்கரம என்ற முக்கிய பூஜை நடக்கும். இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் நெய்த் தேங்காய் உடைக்கப்பட்டு, அபிஷேகத்திற் குப்பின் பிரசாதமாக வழங்கப்படும். ஜன., 14 காலை 6.54 மணிக்கு இப்பூஜை நடக்கும். இந்த பூஜைக்காக, நெய்யபிஷேகம் நேரத்திலும் மாற்றம் செய்யப்படும். அதிகாலை 3 மணிக்கு, நடை திறக்கப்பட்டதும் தொடங்கும் நெய்யபிஷேகம், காலை 6.15 மணிக்கு நிறுத்தப்படும். மகரசங்கரம, உஷ பூஜைகளுக்கு பின், காலை 8 மணிக்கு மீண்டும் நெய்யபிஷேகம் தொடங்கும்.