திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 30. இவர், நேற்று காலை கூவம் ஆற்றங்கரைக்கு சென்றபோது, கற்சிலைகளை கண்டு அதிர்ச்சிடையந்தார்.
இவர் மற்றும் இவரது நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்றில் இறங்கி சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். விநாயகர், முருகன், அய்யப்பன், பைரவர், நாரதர், நாகம்மன் உட்பட 50க்கும் மேற்பட்ட கற்சிலைகளை கண்டெடுத்து, ஆற்று பகுதியில் அடுக்கி வைத்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவவே, பிஞ்சிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கற்சிலைகளை பார்வையிட்டு சென்றனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் பாலாஜி, கடம்பத்துார் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதிக்கு வந்தனர். இப்பகுதியில் தடுப்பணை இருப்பதால், சிலைகள் நீரில் அடித்து வர வாய்ப்பில்லை; சில சிலைகள் சேதமடைந்து காணப்படுவதால், யாரேனும் எடுத்து வந்து இங்கு போட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இதையடுத்து, அனைத்து சிலைகளும் திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் தொல்லியல் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.