தீர்த்தாண்டதானத்தில் அசுத்தமான கடற்கரை: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2026 12:01
தொண்டி: தீர்த்தாண்டதானம் கடற்கரை எங்கும் சிதறிக் கிடக்கும் கழிவுகளால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் முகம் சுளித்தனர்.
தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடலில் பிதுர் கடன்களை நிறைவேற்ற உகந்த இடமாகக் கருதப்படுகிறது. தை அமாவாசை தினமான நேற்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்குத் திதி கொடுக்கவும், கடலில் புனித நீராடவும் இங்கு குவிந்தனர். ஆனால், அங்கு நிலவும் சுகாதாரச் சீர்கேடு பக்தர்களின் முகத்தைச் சுளிக்க வைத்த்து. கடலில் நீராடும் பக்தர்கள், தங்கள் பாவங்கள் விலகும் என்ற நம்பிக்கையில் பழைய துணிமணிகளைக் கடலிலேயே விட்டுச் செல்கின்றனர்.இவ்வாறு விடப்படும் துணிகள் அலைகளால் மீண்டும் கரைக்கே தள்ளப்பட்டு, கடற்கரை முழுவதும் துணிகளாக காட்சியளிக்கின்றன. இவை தண்ணீரில் ஊறி துர்நாற்றம் வீசுவதுடன், கடலில் இறங்கி நீராடும் பக்தர்களின் கால்களில் சிக்கி இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள், தேங்காய் மட்டைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களின் கழிவுகள் கடற்கரை மணல் பரப்பு எங்கும் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதியே ஒரு குப்பை மேடு போலக் காட்சியளிக்கிறது. பக்தர்கள் கூறுகையில், புண்ணியம் தேடி வருகிறோம், ஆனால் கடற்கரை இருக்கும் நிலையைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. துணிகளைக் கடலில் போடக்கூடாது என்ற விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.