பதிவு செய்த நாள்
07
ஜன
2013
10:01
தஞ்சாவூர்: மூலை அனுமார் ஸ்வாமி கோவிலில் வரும், 11ம் தேதி அனுமன் ஜெயந்தி மற்றும் மார்கழி அமாவாசை சிறப்பு வழிபாடு நடக்கிறது. தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் ஸ்வாமி கோவிலில் மார்கழி அமாவாசை சிறப்பு வழிபாட்டையொட்டி வரும், 11ம் தேதி அனுமனுக்கு சிறப்பு அலங்கார சேவை நடக்கிறது. மூலை அனுமாரை பக்தர்கள், அமாவாசை அனுமார் எனவும் அழைக்கின்றனர். அதனால், மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் அனுமார் பிறந்ததை நினைவுபடுத்தும் வகையில், சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும், 11ம் தேதி காலை, 7.30 மணிக்கு லட்ச நாம ஜெபத்துடன் வழிபாடு துவங்குகிறது. 10 மணிக்கு திருமஞ்சனமும், வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தி செய்யும் தேங்காய் துறுவல் அபிஷேகமும், மாலை, ஆறு மணிக்கு சிறப்பு மலர் அலங்கார சேவையும், 6.30 மணிக்கு கிரிவலம் போல பிரசித்தி பெற்ற, 18 முறை வலம் வரும் நிகழ்ச்சி, ஏழு மணிக்கு நான்கு ராஜவீதிகளில் ஸ்வாமி புறப்பாடு ஆகியவை நடக்கிறது. இதுதவிர ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் மூலை அனுமாருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேக பூஜையை கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், செல்வம் பெற வேண்டியும் பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என, அமாவாசை வழிபாட்டு, விழா குழுவினர் தெரிவித்தனர்.