பதிவு செய்த நாள்
07
ஜன
2013
11:01
சபரிமலை: சபரிமலையில் ஆன்-லைன் முன்பதிவு விரிவாக்கம் செய்யப்படும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும், என, கேரளா கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகரன் நாயர் கூறினார். சபரிமலையில் அவர் கூறியதாவது: நீதிபதி ஹரிஹரன் நாயர் கமிட்டி அளித்த பரிந்துரைப்படி, மகர ஜோதி தரிசனத்துக்கு பக்தர்கள் கூடும், 52 இடங்களில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். புல்மேடு, பருந்துபாறை, பாஞ்சாலிமேடு ஆகிய இடங்களில், எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். ஜன., 14 மதியத்துக்குப் பின், பம்பைக்கு, கேரள அரசு பஸ்கள் தவிர, வேறு வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. மகர விளக்கு முடிந்து பம்பையில் இருந்து வாகனங்கள் புறப்பட்டு சென்ற பின்னரே, மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படும். நிலக்கல் பகுதி, எஸ்.பி., தலைமையில் கண்காணிக்கப்படும். பாண்டித்தாவளம் பகுதியில் நின்று ஜோதி தரிசனம் செய்யும் பக்தர்கள், மாளிகைப்புறம் கோவிலின் பின்புறம் உள்ள புதுப்பாலம் வழி, பம்பை செல்ல அனுமதிக்கப்படுவர். மகரவிளக்கு பூஜை காலத்தில் கூட்டம் அதிகரித்தால், நிலக்கல் "பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படும். "ஆன்-லைன் முன்பதிவு பற்றிய விவரங்கள், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அடுத்த ஆண்டு, "ஆன்-லைன் பதிவு செய்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி ஆலோசிக்கப்படும். ஆனால், 18ம் படியின் அகலம் குறைவாக உள்ளதால், ஒரு மணி நேரத்துக்கு எத்தனை பேர் ஏறிச் செல்ல முடியும் என்பதை கருத்தில் கொண்டு தான், முடிவு எடுக்கப்படும். பல நாட்களில் கடுமையான கூட்டம்; சில நாட்களில் கூட்டமே இல்லை என்ற நிலை மாற வேண்டும். பக்தர்களின் வருகையை கண்காணித்து சீராக்க வேண்டும்; அதற்கு ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். இவ்வாறு சந்திரசேகரன் நாயர் கூறினார்.