பதிவு செய்த நாள்
30
ஜன
2026
11:01
சூலூர்: காவடிகளுக்கு பூஜை செய்து, முருக பக்தர்கள் பாத யாத்திரையை துவக்கினர்.
வரும் பிப்., 1 ம்தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முருக பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, காவடி சுமந்து அறுபடை வீடுகள் மற்றும் பழனி, சென்னிமலை, மருதமலை உள்ளிட்ட முருகப்பெருமான் கோவில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். சூலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம், சோமனூர், வாகராயம்பாளையம், கிட்டாம் பாளையம், நீலம்பூர், காடாம்பாடி, காங்கயம் பாளையம், அரசூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள காவடி குழுவினர், தைப்பூசத்தை ஒட்டி பாதயாத்திரையை துவக்கினர். முன்னதாக, தங்கள் ஊர்களில் காவடிகளை அலங்கரித்து பூஜைகள் செய்து பாதயாத்திரை புறப்பட்டனர். ஊஞ்சப்பாளையத்தில் நடந்த காவடி பூஜையில் ஏராளமான முருக பக்தர்கள் பங்கேற்று காவடியாட்டம் ஆடினர். பாரதிபுரத்தில் ஓம் முருகா பழனி பாத யாத்திரை குழுவினர் காவடி பூஜையுடன் யாத்திரையை துவக்கினர். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி விஜயகுமார், ஸ்ரீதர், செந்தில்குமார், நாகராஜ் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.