பதிவு செய்த நாள்
09
ஜன
2013
11:01
சென்னை: கோவில் ஆக்கிரமிப்புகளை தயக்கம் காட்டாமல் அகற்றவும், குத்தகை, வாடகை செலுத்த மறுப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, வெளியேற்ற வேண்டும், என்று அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும், கோவில்களில் நடக்கும் திருப்பணிகள், அன்னதான திட்டம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் ஆனந்தன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் ஆனந்தன் பேசியதாவது: கோவில்களில் நடக்கும் திருப்பணிகளை விரைவு படுத்த வேண்டும். நன்கொடையாளர்கள் மற்றும் உபயதாரர்கள் திருப்பணி செய்ய முன்வரும்போது, அவர்களுக்கு வேண்டிய உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டும். அன்னதானத்திற்கு முக்கியத்துவம் அளித்து, தரமான உணவுகளை அளிக்க வேண்டும். அன்னதான கூடங்களை நவீனமயமாக்கவும், புதிய அன்னதானக் கூடங்கள் கட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து காலி நிலங்கள், கட்டடங்களில், கோவில் பெயர், சர்வே எண், பரப்பளவு போன்ற விவரங்கள் பொதுமக்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தயக்கம் காட்டக் கூடாது. வாடகைதாரர்கள், குத்தகை தாரர்களிடம் இருந்து கோவில்களுக்கு வரவேண்டிய, நிலுவைகளை வசூலிக்க வேண்டும். குத்தகை, வாடகையினை செலுத்த மறுப்பேர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, வெளியேற்ற வேண்டும். கோவில்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை மணி ஆகியவை அமைக்க வேண்டும். போலீசுடன் தொடர்பு கொண்டு, இரவு ரோந்துப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். கோவில்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.