பதிவு செய்த நாள்
10
மார்
2026
12:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில், தேரோட்டம் நாளை துவங்குகிறது. இதையடுத்து, தேர் தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 17ம் தேதி இரவு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 23ம் தேதி இரவு, அணி எடுப்பு, கரியகாளியம்மனுக்கு அபிேஷகம் நடைபெற்றது. அதன்பின், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது.
கடந்த, 27ம் தேதி இரவு, கரியகாளியம்மன் கடைசி நாள் அபிேஷக பூஜை நடைபெற்றன. கடந்த, 3ம் தேதி இரவு, பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. 6ம் தேதி வெளிப்பூவோடு நிகழ்ச்சி துவங்கியது. 7ம் தேதி கொடி கட்டுதல், அலகு குத்தி பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் ஏ.பி.டி. பூவோடு, நேற்று ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, மகுடம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை காலை, மாவிளக்கு வழிபாடு, அம்மன் திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. 12ம் தேதி இரவு, இரண்டாம் நாள் தேரோட்டம்,13ம் தேதி மூன்றாம் நாள், தேரோட்டம், தேர் நிலைக்கு வருதல், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 14ம் தேதி காலை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி மகா அபிேஷக பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. நாளை தேரோட்டம் துவங்கும் நிலையில், மாரியம்மன் கோவில் வளாகத்தில், அம்மன் எழுந்தருளும் வெள்ளி தேர் மற்றும் விநாயகர் எழுந்தருளும் தேர் தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.