பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.கோபி பாரியூர் கோவிலில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த குண்டம் திருவிழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர்.நேற்று மாலை தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பாரியூர் கோவில் முன் துவங்கிய தேரோட்டம், அந்தாணி சாலை, ஆதிநாராயண பெருமாள் கோவில் வழியாக அமரபணீஸ்வர் கோவில் சென்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.எம்.எல்.ஏ., ரமணீதரன், நகராட்சி தலைவர் ரேவதிதேவி, துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், நகர செயலாளர் காளியப்பன், யூனியன் தலைவர் சத்தியபாமா, முன்னாள் யூனியன் தலைவர் முத்துசாமி, யூனியன் கவுன்சிலர் வேலுமணி, பஞ்சாயத்து தலைவர் பழனிசாமி, மாணவரி கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.இன்று இரவு முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. முத்துப்பல்லக்கு ஊர்வலத்தில் ஈரோடு, கோபி, சத்தி, அந்தாணி, அந்தியூர், கவுந்தபாடி பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.முத்துப்பல்லக்கு ஊர்வலத்தை முன்னிட்டு அத்தாணியில் இருந்து கோபி வரும் பஸ்கள், லாரிகள் புதுக்கரைபுதூர் வழியாக பொலவகாளிபாளையம் சென்று கோபிக்கும், கோபியில் இருந்து செல்லும் வாகனங்கள் வெள்ளாளபாளையம் பிரிவு சென்று தொட்டிபாளையம் வழியாக அத்தாணி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட உள்ளது. நாளை தெப்போற்சவம், மஞ்சள் நீர் உற்சவம், 14, 15ம் தேதி கோபியில் மஞ்சள் உற்சவம், 16, 17ம் தேதி புதுப்பாளையத்தில் மஞ்சள் உற்சவம், 18, 19ம் தேதி நஞ்சகவுண்டன்பாளையத்தில் மஞ்சள் உற்சவமும், 19ம் தேதி அம்பாள் மலர் பல்லக்கில் கோவில் வந்தடைதல் மற்றும் மறுபூஜை நடக்கிறது.