பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
திருத்துறைப்பூண்டி: தஞ்சை, திருத்துறைப்பூண்டி பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜை கோலாகலமாக நேற்று நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், முள்ளியாற்றின் வடகரையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் வரதராஜபெருமாள் கோவிலில் விஸ்வரூப, வைராக்கிய ஆஞ்சநேயருக்கு நேற்றுக்காலை சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. மாலை மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.அனுமன் ஜெயந்தியும், அமாவாசையும் ஒரே நாளில் வந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
இதேபோல ராமர்கோவிலில் எழுந்தருளி, அருள்பாலிக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு காலை சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது.பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். தஞ்சையில் வழிபாடு: மேலராஜ வீதியிலுள்ள மூலை அனுமார் கோவிலில், நேற்றுக்காலை முதல் அனுமன் ஜெயந்தி வழிபாடு நடந்தது. காலை, 7.30 மணிக்கு லட்ச ராமநாம ஜெபம் துவங்கியது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், வறுமை, கடன் தொல்லையை போக்கும் தேங்காய் துருவல் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, மாலை, ஆறு மணிக்கு மலரலங்காரம் செய்து, நான்கு ராஜவீதிகளிலும் ஆஞ்சநேயர் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.