பதிவு செய்த நாள்
15
ஜன
2013
10:01
ஈரோடு: ஈரோடு சீரங்கன் வீதி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், தை மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்று கத்தி போடுதல் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு சீரங்கன் வீதியில் ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில், ஆண்டு தோறும் தை மாத திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு தை மாத திருவிழா, 13ம் தேதி காலை, 11 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை, 5.30க்கு புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், 6 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில் திடலில் இருந்து சக்தி பூஜை செய்து, சக்தி அழைத்து வருதல் நடந்தது. இதனையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் கத்தி போடுதல் நடந்தது. ஆக்ரோஷமாக ஆடி வந்த பக்தர்களை, பொதுமக்கள் பயபக்தியுடன் வணங்கி சென்றனர். மதியம், 12 மணிக்கு சவுடேஸ்வரி அம்மனுக்கு விஷேச பூஜை, மஹா தீபாராதனை, மாலை, 5 மணிக்கு ராகு தீப ஜோதி மெரவணை நடந்தது. இன்று காலை, 11 மணிக்கு, சவுடேஸ்வரி அம்மனுக்கு மஹா அபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.