மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2026 01:03
கோவை ; மேட்டுப்பாளையத்தில் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காந்தி மைதானம் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு மைதானம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத குண்டம் மற்றும் தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது ,கம்பம் நாட்டுதல், கொடியேற்றம் திருவிளக்கு பூஜை, தேர் மகுடம் ஏற்றுதல், குண்டம் திறத்தல், பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து இன்று காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி காலை பவானி ஆற்றங்கரையில் இருந்து சிம்ம வாகனத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் எழுந்தருளி நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலை அடைந்தது. அதன்பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தலைமை பூசாரி குண்டத்தை வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் கையில் வேல் எடுத்து பக்தியுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார் அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் கோலக் கூடை, சக்தி கரகம், சிவன் கரகம் எடுத்து குண்டம் இறங்கினார்கள் அவர்களைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கினார்கள். ஒரு சில ஆண் பெண் பக்தர்கள் கையில் குழந்தைகளை எடுத்துக் கொண்டு குண்டம் இறங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து நாளை மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.