பதிவு செய்த நாள்
16
ஜன
2013
10:01
உடுமலை: விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, உடுமலை ஆல்கொண்டமால் கோவிலில், இன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. உடுமலை செஞ்சேரிமலை ரோட்டில் உள்ளது சோமவாரப்பட்டி ஊராட்சி. இங்கு முட்புதர்களால் சூழப்பட்ட கொடிய பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ், லிங்க வடிவில், புற்று உருவானது. அந்த காட்டுப்பகுதியில் மேயும் மாடுகள், லிங்க வடிவில் உருவான புற்றுக்கு பாலை சொரிந்து அபிஷேகம் செய்துள்ளன. தொடர்ந்து பசுக்கள் பால் சொரிவதை கண்ட முன்னோர்கள், ஆயர்பாடி கண்ணனின் மகிமை என்று உணர்ந்தனர். இக்கோவிலின் அருகே ஆலமரங்கள் நிறைந்த ஆலாமரத்தூர் என்னும் ஊர் உள்ளது. ஆலம் உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடி கொண்டதால் அங்குள்ள திருமாலை "ஆல்கொண்டமால் என்று மக்கள் வணங்க ஆரம்பித்தனர். சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு விவசாயிகள் பால், வெண் ணை ஆகியவற்றால், அபிஷேகம் செய்து வழிபட துவங்கினர். ஆண்டு முழுவதும் உடனிருந்து உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதையும், உண்மையான உயர்வுக்கு துணை புரியும் உயிர்களை வழிபடுவதையும், இந்த கோவில் வழிபாட்டு முறை காட்டுகிறது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியுள்ள ஆல்கொண்டமால் கோவிவிலில், பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன், பூஜைகள் துவங்கின. பகல் 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6:00 மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இவை இன்றும் தொடரவுள்ளன. அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பகல் 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறவுள்ளது. திருவிழாவையொட்டி, உடுமலை பகுதி கிராம மக்கள், பாரம்பரிய நடனங்களை ஆடியும், வழிபாடுகள் நடத்தியும் வருகின்றனர். ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, பக்தர்கள் மாட்டு வண்டிகளிலும், வாகனங்களிலும் வந்து இறைவனை தரிசித்து செல்வது வழக்கம். ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, உடுமலை கிளை போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.